Tuesday, February 21, 2017

வெகு  தாமதமாகவே எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது, இணையத்தில் இப்போதுள்ள உள்ளீட்டு கருவிகளின் வசதிகளோடு இப்போது எழுதுவதை எளிதாகவே உணர்கிறேன். எதை எழுதுவது என்ற குழப்பம் ஏற்படவே இல்லை. அம்மாவுடனான உரையாடல்களில் கிடைத்த பல்வேறு கதைகள் நான் படித்த பல நாவல்களை விட சுவாரசியம். இதை எழுதுவது எனக்கு எளிது, என் பிள்ளைகளுக்கு தங்கள் அப்பாயி வாழ்க்கை அனுபவங்களை கடத்தியது போலும் இருக்கும். தொடக்கத்தில் இதை குட்டி கதைகளாக எழுதிவிட்டு பின்னர் (என்னால் முடிந்தால்) ஒரு  நாவலாக மாற்றுவதே உத்தேசம்.

சிவகங்கை மாவட்டத்தில், மைகேல் பட்டினத்தில் பிறந்த 'அமலா' தான் என் நாயகி, இந்த கதைகளிலும் கூட. நகரத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் என் பிள்ளைகளுக்கு, ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கி பெருநகரத்தில் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாயியின் வாழ்க்கை சம்பவங்கள் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.


---- ## ----

அவர் யார் ?

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்திருப்பேன் என நினைக்கிறேன். ஊரிலிருந்து திருச்சிக்கு ரயில் பயணம். உண்மையில் சிவகங்கையிலிருந்துதான் ரயில். ஊரிலிருந்து சில கிலோமீட்டர்கள் நடை, பின்னர் பஸ் பிடித்து சிவகங்கை வரவேண்டும். பெரும்பாலும் யாரவது மேல் வகுப்பு படிக்கும் அக்காக்களுடன் என்னை ஊரிலிருந்து அனுப்பிவிடுவது வழக்கம், அந்த முறை யாரும் இல்லாததால் அப்பாவே சிவகங்கை  வரை வந்து வழியனுப்பினார். அப்பாவுக்கு அபார ஞாபக சக்தி, மூக்கு போடி டப்பாவை எங்காவது வைத்து விட்டு எங்கள் எல்லோரையும் விரட்டுவார். அன்றும், டிக்கெட் எடுத்து தன் பாக்கெட்டிலேயே வைத்துக்கொண்டு  என்னை ரயிலேற்றி விட்டு விட்டார். அப்பா  போன பின்பே உரைத்தது. இதயத்துடிப்பை காதுகளில் கேட்டுக்கொண்டே திருச்சி வரை வந்து சேர்ந்தேன். நல்ல வேலை பரிசோதகர் யாரும் வரவில்லை.

நேரம் ஆகிவிட்டதால் நடந்தே மிளகு பறை எதிரிலுள்ள பொன் நகர்  மாமா  வீட்டிற்கு சென்று இரவு தங்கிவிட்டு, காலையில் ஹாஸ்டல் செல்வதாக உத்தேசம். அறுபதுகளிலெல்லாம் திருச்சி ஜங்கஷனிலிருந்து நடையை கட்டினோம் என்றால்  பேருந்து நிலையம் வரை ஒன்றிரண்டு கட்டிடங்களே. மெல்ல இருள் கவிழ தொடங்குகையில் பேருந்து நிலையம் அருகில் வந்துவிட்டேன், அங்கிருந்து மூன்றாக பிரியும் சாலைகள். இருள் குழப்பத்தை அதிகப்படுத்த, நேரம் கடத்த வேண்டாம் என்று மூன்றில் ஒன்றை குத்து மதிப்பாக தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன். கட்டிடங்கள் இல்லை, இருபக்கமும் கருவேல மரங்கள் மட்டுமே. ஒரு பத்து நிமிடங்கள் கழித்து இது தவறான பாதை என்று உள்ளுணர்வு சொல்ல மீண்டும் இதயத்துடிப்பு காதுகளில். திரும்பி சென்றுவிடலாம் என்று திரும்பினேன், சற்று தொலைவிலிருந்து ஒருவன் என்னை நோக்கி வந்து என்ன ஆச்சு எங்க போகணும் என்றான். அவன் உருவமும் மொழியும் அவனை நல்லவனில்லை என உணர்த்த இன்னும் பலமாக இதயத்துடிப்பு. 'இல்ல பொன்னகர் போகணும், பாத மாறிட்டேன்', அவனை பார்க்காமலே சொல்லிவிட்டு நடையின் வேகத்தை கூட்ட, அவனோ நானும் அங்க தான் போறேன் என்று கூட நடக்க ஆரம்பித்தான். தெய்வத்தை நினைத்துக்கொண்டு இன்னும் வேகமாக நடக்க எத்தனிக்கையில் எங்கள் பின்னாலிருந்து ஒரு குரல். 'யாரு அங்க, எங்க பாப்பா போற', வயது முதிர்ந்த மனிதர் ஒரு சைக்கிளை தள்ளிக்கொண்டு எங்களை நோக்கி வந்தார், நான் பதில் சொல்லுமுன் அவன், 'பொன்னகர் போகணுமாம், நான் அங்கதான் போறேன் வழிகாட்டி விட்ருவேன்' என , அவரோ கோபத்துடன் 'நீ போடா, நான் பாத்துக்குறேன்' என்றார். அவரின் கர்ஜனையை சற்றும் எதிர் பார்க்காத அவன் வேகமாக எதிர் திசையில் நடந்து மறைந்தான். என்னுடன் அவர் சைக்கிளை தள்ளிகொண்ண்டுவர, மீண்டும் அந்த மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் வந்ததும். அவரே  பாதையை காட்டி நடந்தார். ஊரிலிருந்த வந்த கதையை சொல்லிக் கொண்டு நடக்க சற்று நேரத்தில் மாவாவும் அத்தையும் தூரத்தில் வருவது தெரிந்தது. 'அதோ எங்க மாமா அத்தை வர்றாங்க' என, அவர் அப்படியா என்று சொல்லி விட்டு வந்தார். அவர்களை நெருங்கி 'ஊரிலிருந்து வந்தேன், வழி  மாறிட்டேன், இவர் தான் பத்திரமா கூட்டிட்டு வந்தார் ', சொல்லிட்டு திரும்பினேன், அங்கு யாருமில்லை . மாமாவோ அத்தையோ என் கூட வந்தவரை பார்த்த மாதிரியே  காட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் திரும்பி என்னை  வீட்டிற்கு அழைத்துச்செல்லும் வரை என்னைச்சுற்றி வந்த கேள்விக்கு இன்றுவரை விடை தெரியவில்லை . அவர் யார் ?

--- ## ---